இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும்- ரொபேட் ஓ பிளேக்
July 21, 2010 at 11:06 pm · Posted Public Articles
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இன்று மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸை சந்தித்துள்ளார்.இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வர்த்தக சமூகத்தினர் மற்றும் சிவில் சமூக குழுக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இன்று மாலை அவர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார் இதன்போது கருத்து வெளியிட்ட அவர்…
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மற்றுமொரு முக்கியமான விடயமாக கடந்தகால தவறுகளுக்கு பொறுப்பு ஏற்கப்படுதலை குறிப்பிட்டுள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை மனித உரிமைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவும் நல்ல பலனைத்தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக்குழு ஐ. நா செயலாளரால் நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றும் அதுமாத்திரமன்றி, அது ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு மாத்திரந்தான் என்பதுடன் அதற்கு புலன் விசாரணை செய்யும் பங்கோ நீதித்துறைப் பங்கோ கிடையாது என்றும் பிளேக் கூறினார்.
