கால்பந்தாட்டம் 2010 உப்புச்சப்பில்லாத உலகக் கோப்பைப் போட்டிகள்-சச்சிதானந்தன் சுகிர்தராஜா

August 26, 2010 at 10:01 am · Posted Public Articles

முதலில் சில உண்மைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். நான் கால்பந்தாட்டத்தின் முழுமையான ரசிகன் அல்ல. ஆனால் உலகமயமாக்கப்பட்டுவிட்ட இவ்விளையாட்டின் அரசியல், கலாச்சார விளைவுகளை வெகுநாட்களாகவே அவதானித்துவந்திருக்கிறேன். இந்தக் கட்டுரையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்களைப் பற்றிய வர்ணனை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். 19ஆம் உலகக் கோப்பையின் அறுபதுக்கும் மேற்பட்ட ஆட்டங்களை நான் முழுமையாகப் பார்த்தேன் என நெஞ்சில் கைவைத்துச் சொல்லமாட்டேன். நேரம் ஒதுக்கி நான் பார்த்த சில ஆட்டங்களும் எனக்கு ஏமாற்றமளித்தன. அவற்றில் ஒன்று பிரேசிலுக்கும் போர்ச்சுக்கலுக்கும் இடையே நடந்த ஆட்டம்.

இந்த இரு அணிகளிலும் இன்றைய நிலவரப்படி இவ்விளையாட்டின் பெரும் சூரர்கள் எனக் கருதப்படுகிற ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அன்றைய விளையாட்டில் அவர்கள் சுண்டைக்காய்கள்போல் தென்பட்டார்கள். இந்த 90 நிமிட இம்சையுடன் ஒப்பிடும்போது ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பானதுபோல் தோன்றியது. கானாவுக்கும் உருகுவேக்கும் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தின் கடைசிச் சில நிமிடங்களே பார்வையாளர்களின் இரத்த அழுத்தத்தைப் பாதிப்பவையாயிருந்தன. விசயம் தெரிந்த கால் பந்தாட்ட விமர்சகர்கள் இந்த மாதிரியான அலுப்பூட்டும் ஆட்டங்களை இதுவரையிலான எந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலும் பார்த்ததில்லை என்றனர். இந்தப் போட்டியின் பெரிய ஆச்சரியம் கால்பந் தாட்டத்தின் தெய்வங்களாகப் போற்றப்படும் ஆட்டக்காரர்களான இங்கிலாந்தின் ரூணி, அர்ஜண்டினாவின் மெஸ்ஸி, பிரேசிலின் கக்கா போன்றவர்கள் சாதாரண மனிதர்களாகக் காட்சி அளித்ததுதான். ஒவ்வொரு வாரமும் ஐரோப்பியக் கால்பந்தாட்டக் கூட்டிணைவுப் போட்டிகளில் இவர்களின் கால்கள் செய்த மாயாஜாலங்களில் மெய் மறந்துபோயிருந்த ரசிகர்களுக்கு இந்தப் பந்தயத்தில் இவர்கள் விளையாடிய விதம் திண்டுக்கல் கால்பந்தாட்டக் கழகத்தால் நடத்தப்படும் நான்காந்தர ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியிருக்க வேண்டும். இந்தத் தென்னாப்பிரிக்கப் போட்டியில் எல்லோருக்கும் தெரியவந்த பெரிய உண்மை, உலக அளவில் கால் பந்தாட்டத்தின் முதல் தர நாடுகளாகக் கருதப்படும் ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளின் ஆட்டக்காரர்களுக்கும் இந்த விளையாட்டின் சிசுக்கள் என்று வர்ணிக்கப்படும் ஆசிய, ஆப்பிரிக்க தேசங்களின் ஆட்டக்காரர்களுக்குமிடையேயான இடைவெளி ஆட்டத்தின் திறன்கள் நுட்பங்கள் சார்ந்து அவ்வளவு அகன்றதல்ல என்பதுதான்.

இனி ஸ்பெயினுக்கும் நெதர்லாந்துக்குமிடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்துக்கு வருவோம். மணி ரத்தினத்தின் சினிமா போல் இடையிடையே ரசிகர்களின் கவனத்தைக் கவரக்கூடிய விளையாட்டுத் திறன்கள் அங்கங்கே அந்த ஆட்டத்தில் பளிச்சிட்டன. மற்றப்படி இந்த ஆட்டம் நெதர்லாந்து வீரர்களின் முரட்டுத்தன விளையாட்டுக்காகவே நினைவுகூரப்படும். 70களில் முழுமையான கால் பந்தாட்டம் (total football) என்ற புரட்சிகரமான கருத்துப் படிமத்தை அறிமுகப்படுத்தி இந்த ஆட்டத்தை அழகுபடுத்தியிருந்தது நெதர்லாந்து. பலரையும் ஆச்சரியப்படவைத்து, கால்பந்தாட்டத்திற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்த அதே நெதர்லாந்துதான் இப்போது மிருகத்தனமாக ஆடி முழுமையான அசிங்கம் (total foul) என்ற இன்னொரு விளையாட்டு முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

கடந்த எழுபது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த உலகக் கோப்பைக்கான போட்டியில் இதுவரை ஏழு நாடுகளே வென்றிருக்கின்றன. இவற்றின் பெயர்களை இந்த ஆட்டத்தின் பக்தர்கள் ஜெபம் போல் ஒப்புவிப்பார்கள். ரசிகர் அல்லாதவர்களுக்காக அந்த நாடுகளின் பட்டியலைத் தருகிறேன்: உருகுவே, பிரேசில், அர்ஜண்டினா, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு. இவற்றுடன் எட்டாவதாக இப்போது ஸ்பெயின் சேர்ந்திருக்கிறது. இன்றைய ஸ்பெயினுக்கு இந்த வெற்றி மிக அவசியமானது. அதன் பொருளாதாரம் மிகவும் தளர்ந்த நிலையில் இருக்கிறது. கிரீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஸ்பெயினுக்கும் ஏற்படலாம் என்பது பரவலான எதிர் பார்ப்பு. வேலை இல்லாத அந்த நாட்டின் 5 மில்லியன் பேருக்கு இந்த வெற்றியால் சுபிட்சம் கிட்டப்போவது இல்லை. எளிதில் நொறுங்கிவிடக்கூடிய நிலையிலிருக்கிற அந்த நாட்டின் ஒற்றுமைக்கு இந்த வெற்றி கொஞ்சம் தெம்பூட்டியிருக்கிறது.

ஸ்பெயின் அணியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற வீரர்களில் ஏழு பேர் பார்சிலோனாவைச் சேர்ந்தவர்கள். சிங்கள சிறீலங்கா அணியில் ஏழு ஈழத் தமிழர்கள் அங்கம் வகித்தால் எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் இதன் அரசியல் தாத்பரியத்தை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். பார்சிலோனா, கட்ட லோனியாவில் இருக்கிறது. ஸ்பெயினிலிருக்கிற 17 ராஜ்ஜியங்களில் கட்டலோனியாவும் ஒன்று. இந்தக் கட்டலோனியர்கள் ஸ்பெயினுடன் தங்களை முழுமையாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. ஸ்பானியர்களும் கட்டலோனியர்களும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள், வெவ்வேறு கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்கள். தேசியகீதங்கள்கூட வெவ்வேறானது தான். ஆட்டம் ஆரம்பிக்கும் முன் ஸ்பெயின் தேசியகீதம் பாடப்பட்டபோது பார்சிலோனிய வீரர்களின் உதடுகள் மெலிசாக அசைவதற்குக்கூடப் பெரும்பாடுபட்டதைத் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் அவதானித்திருக்கலாம். இதற்கு மாறாக விம்மிய நெஞ்சுடன் நெதர்லாந்து வீரர்கள் பாடினார்கள். தொண்டை நரம்புகள் முறுக்கேற அவர்கள் பாடியதற்கு வேறொரு காரணமும் உண்டு. நெதர்லாந்தின் தேசியகீதம் 16ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் இயற்றப்பட்டது. இந்த அரசியல் பின்புலமும் அந்தப் பாடலில் பொதிந்திருந்த விடுதலை வேட்கையும் இந்த இறுதி ஆட்டத்தின் முக்கியத்துவமும் நெதர்லாந்து ஆட்டக்காரர்களின் குரல்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தன. கட்டலோனியர்கள் தங்களுடைய பிரதேசத்திற்குச் சுய ஆட்சியும் அதிக அதிகாரமும் வேண்டும் எனப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இறுதிப் போட்டி நடந்த வாரத்தில் ஸ்பெயின் நீதிமன்றம் அந்நாட்டின் அரசியல் சாசனம் ஸ்பெயினைத் தவிர மற்ற பிராந்திய நாடுகளை மதிப்பதில்லை என்று தீர்ப்புக் கூறியிருந்தது. இதை எதிர்த்துப் போட்டி நடப்பதற்கு முதல் நாள் பார்சிலோனாவில் ஒரு பெரிய கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆனால் பிரதேசத் தீவிரவாதம் ஒரு தேசியக் கொண்டாட்டத்தைக் கெடுக்க அனுமதிக்கவில்லை. கட்டலோனியரே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வொன்றை முன்வைத்தனர். சனிக்கிழமை கண்டன ஊர்வலம் நடத்துவோம்; கொண்டாட்டங்களை ஞாயிற்றுக்கிழமை வைத்துக்கொள்வோம்; எங்கள் கைகளில் ஒன்று கட்டலான் கொடியைப் பிடித்திருக்கும், மற்றொன்றில் ஸ்பெயின் கொடி இருக்கும்; கட்டலான், ஸ்பானிஷ் ஆகிய இருமொழிகளிலும் நம் நாடு நீடுழி வாழ்க என்று உரக்கக் கத்துவோம்!

ஞாயிறன்று இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி பெற்ற வெற்றிக்குப் பிறகு அந்நாட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பிறநாட்டினராலும் பின்பற்றப்பட வேண்டிய, கூட்டாட்சிமுறைக்கு மேன்மையான ஒரு எடுத்துக்காட்டு. தேவையில்லாமல் ஈழத்தை மறுபடியும் இங்கே இழுக்கிறேன். இந்தப் பரந்த மனப்பான்மை இலங்கை மண்ணில் சாத்தியமாகுமா?

உப்புச்சப்பில்லாத இந்த 2010 உலகக் கோப்பைப் போட்டி நான்கு காரணங்களுக்காகக் கால்பந்து வட்டாரங்களில் அடிக்கடி நினைவுகூரப்படும். ஒன்று, இங்கிலாந்து வீரர் லாம்பார்ட் ஜெர்மனியருக்கு எதிராக அடித்து நடுவரால் மறுக்கப்பட்ட இரண்டாவது கோல். லட்சக்கணக்கான தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிந்த கோல் நடுவரின் கண்களுக்கு மட்டும் தெரியாமல் தப்பிப்போனது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இனி அடுத்து வரும் போட்டிகளில் நவீனத் தொழில்நுட்பவியல் பயன்படுத்தப்படும் என்பது மட்டும் நிச்சயம். கிரிக்கெட், டென்னிஸ், ரக்பீ ஆட்டங்களில் பயன்படுத்தப்படுவது போல் ஒளித்தோற்ற சாட்சியம் (video evidence) பயன்படுத்தப்படும். இதுவரை சர்வதேசக் கால்பந்தாட்ட இணையம் (FIFA) இதை எதிர்த்து வந்தது. இனி இந்த எதிர்ப்புச் சாத்தியமில்லை. இரண்டாவது காரணம் உருகுவே வீரர் ஸ்சுவரேஸ் கடைசி நிமிடத்தில் கானா ஆட்டக்காரர் அடித்துக் கோலுக்குள் நுழைந்த பந்தை இது கால்களால் விளையாடும் ஆட்டம் என்பதை மறந்து தன் கைகளால் தடுத்தது. இந்தச் செய்கை ஆட்ட நெறிமுறைகளுக்குக் களங்கம் விளைவித்துவிட்டது என்பது ஒரு சாராரின் கருத்து. வணிகமயமாக்கப்பட்ட விளையாட்டில் வெற்றிதான் முக்கியம் என்பது இன்னொரு சாராரது அபிப்பிராயம். இதில் எது சரி என்பது இந்த விளையாட்டு பற்றிய அவரவர் பார்வையைப் பொருத்தது.

மூன்றாவதாக இங்கிலாந்தின் நடுவர் ஹாரல்ட் வேப் இறுதி ஆட்டத்தில் 14 மஞ்சள் அட்டைகளையும் ஒரு சிவப்பு அட்டையையும் காட்டியது. இவ்வளவு அட்டைகள் காட்டப்பட்டது ஒரு உலக சாதனை என்கிறார்கள். மைதானங்களில் விளையாட்டு பற்றிய வர்ணனைகளைக் கேட்பதற்குப் பெரிய இடையூறாக இருந்த பிளாஸ்டிக் ஊதுகோல்களின் காதடைக்கும் சத்தம் இந்த உலகப் போட்டியை நினைவுகூர்வதற்கான நான்காவது காரணமாக இருக்கும். பெரும் இரைச்சலை எழுப்பிய அந்தக் கருவியின் பெயர் Zulu vuvuzeala. இதன் சுத்தத் தமிழ் அர்த்தம் வருக, ஒன்றிணைக, கொண்டாடுக! இத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: காதை இறுக்கிப் பொத்திக்கொள்க!

இந்தப் போட்டியில் அதிசீக்கிரமாக வெளியேற்றப்பட்டது மட்டுமல்லாமல் மிக மோசமாக விளையாடிய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. முன்பெல்லாம் கால் இறுதி அல்லது அரை இறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்தபோது தங்கள் ஆட்டத்தின் குறைகளை ஆராயாமல் ஏதாவது ஒரு சாக்குப் போக்கை ஆங்கிலேயர் காரணம் காட்டுவார்கள். இந்தத் தடவை இதற்கு மாறாக ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகங்கள் எல்லாமே ஒத்துக்கொண்ட உண்மை இந்த ஆங்கில அணி முழுக்குப்பை என்பதுதான். இங்கிலாந்து கால்பந்தாட்ட ரசிகர்கள் இந்தியக் கிரிக்கெட் விசிறிகள்போல் தங்களுடைய அணி தோற்றால் சொந்த வீட்டில் சாவு ஏற்பட்டதுபோல் நடந்துகொள்வார்கள். வேயின் ரூணியின் கொடும்பாவியை எரிக்கும் அளவுக்கு இன்னும் ஆங்கிலேய ரசிகர்கள் அசுரர்களாகவில்லைதான். ஏகாதிபத்தியக் காலகட்டத்தின் முடிவுக்குப் பிறகு ஆங்கில இனத்தை ஒன்றுபடுத்தும் சின்னமாகக் கால்பந்தாட்டம் மாறியிருக்கிறது. பேரரசின் இழந்துபோன ஆன்மாவை இந்த விளையாட்டு மூலம் மீட்டெடுக்க முயல்கிறார்கள் பிரித்தானியர்கள். ஆகையால் இந்த விளையாட்டுடன் அவர்களுக்கு உணர்ச்சிமயமான பிணைப்பு உண்டு.

உலகக் கோப்பையை ஸ்பெயின் வென்றாலும் இறுதி வெற்றி தென்னாப்பிரிக்கக் குடியரசுக்கே சேரும். போட்டி தொடங்குவதற்கு முன் ஆங்கில ஊடகங்கள் பந்தயங்கள் அமைதியாக நடைபெறுமா எனக் கேள்வியெழுப்பியிருந்தன. அதற்கு இப்போது அந்த நாட்டில் வலுவடைந்திருக்கும் இனப்பகை காரணம். சில மாதங்களுக்கு முன் தீவிர இனவாத ஆப்பிரிக்கரான Terre Blanche அவருடைய கறுப்பினத் தொழிலாளி ஒருவரால் கொல்லப்பட்டார். உலகக் கோப்பை நடைபெறாதவாறு போராட்டம் நடத்துவோம் என்று வெள்ளை இனத் தீவிரவாதிகள் எச்சரித்திருந்தார்கள். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் Julius Malema, வெள்ளையர் வசம் இருக்கும் காணிகளை ஜிம்பாப்வே பாணியில் கறுப்பர்கள் பலாத்காரமாக மீட்க வேண்டும் எனத் தூண்டிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல அவருடைய அரசியல் கூட்டங்களில் உற்சாகமாகப் பாடப்படும் Kill the Boers என்ற இனவாதப் பாடல் வெள்ளையர் கறுப்பர்களுக்கிடையே ஏற்கனவே முறிவடையும் நிலையிலிருந்த இன உறவை மேலும் இறுகச்செய்தது. இவற்றைவிட வேறு சில கவலைகளும் இருந்தன. விளையாட்டு அரங்கங்கள் நேரத்தில் கட்டி முடிக்கப்படுமா? தென்னாப்பிரிக்க உள்கட்டமைப்புகள் சர்வதேசத் தராதரத்திற்கு வருமா? இந்தப் போட்டியை முழுக்குடியரசும் ஆதரிக்குமா? கால்பந்தாட்டம் தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தவர்களிடம் மட்டுமே பிரபலமானது. வெள்ளைச் சமூகம் இந்த விளையாட்டை முழுமையாகத் தழுவவில்லை. அவர்களுக்கு ரக்பியும் கிரிக்கெட்டும்தான் முக்கியம். ஆனால் இந்தச் சந்தேகங்கள், பயங்கள், தயக்கங்கள் எல்லாம் பொய் எனத் தென்னாப் பிரிக்கா நிரூபித்திருக்கிறது. கறுப்பினத்தவர்கள் ஒரு உலகத்தரமான நிகழ்ச்சியை ஒபாமா சொன்ன ‘ஆம் எம்மால் முடியும்’ என்பதை நிரூபித்திருக்கிறார்கள். நாடே ஒன்று திரண்டு ஒற்றுமையுடன் காணப்பட்டது. கறுப்பினத்தவர்களின் தேசியகீதமான Nkosi Sikelel’ iAfrika ஆப்பிரிக்க வெள்ளை இனத்தவர்களால் உற்சாகத்துடன் பாடப்பட்டது இதற்கு எளிய உதாரணம். அதேபோல் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர் வெள்ளையினத்தவரின் ஆட்சிக்காலத்தில் நடப்பிலிருந்த Die Stem என்னும் தேசியப் பாடலுக்கு மிக ஆர்வத்துடன் குரல் கொடுத்ததையும் குறிப்பிட வேண்டும். இந்த அனுகூலமான வேளையில் ஒரு அபசகுனமான கேள்வி உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆறு வாரக் கேளிக்கைக்காக முழுமூச்சுடன் உழைத்து உலகத் தரம் கொண்ட விளையாட்டுத் திடல்களையும் நாட்டின் அடிப்படை வசதிகளையும் சீர்திருத்தி மேம்படுத்த முடியுமானால் ஏன் அந்த நாட்டின் நகரங்களின் எல்லையோரங்களில் இழிந்த நிலையிலிருக்கும் குடியிருப்புகளை மேம்படுத்த முடியாது?

உருமாறிவரும் ஆட்டமும் ஆட்டக்காரர்களும்

ஐரோப்பியர்களின் கையிலிருந்த ஆட்டம் முழு உலகுக்குமான ஒரு விளையாட்டாக உருமாறியிருக்கிறது. இதற்கு முழுக்காரணம் சர்வதேசக் கால்பந்தாட்ட இணையம் (FIFA) எடுத்த சில தீர்க்கமான முடிவுகளே. 1966இல் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றபோது 16 அணிகளே பங்கேற்றன. ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களிலிருந்து வடகொரியா மட்டுமே ஆடத் தகுதிபெற்றிருந்தது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் 32 நாடுகள் மோதின. அவற்றில் ஆப்பிரிக்க நாடுகளின் ஐந்து அணிகளும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மூன்று அணிகளும் கலந்துகொண்டன. இப்போதைய போட்டியில் கலந்துகொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளை அறுபதுகளில் நுண் நோக்கி வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடித்திருக்க முடியாது. அவை இன்னும் தனித் தேசியக்கொடிகளைக் கொண்ட தேசிய அரசுகளாக உருவாகவில்லை. இந்த விரிவாக்கத்திற்கு முழுக்காரணம் சர்வதேசக் கால்பந்தாட்ட இணையத்தின் பரந்த பார்வையே. சுதந்திர வணிகத்தை ஆதரிப்பவர்களுக்குக் கால்பந்தாட்ட இணையத்தின் செய்கைச் சந்தையில் ஒரு வலுக்கட்டாயமான குறுக்கீடாக மட்டுமல்ல ஒரு திட்டமிட்ட பாகுபடுத்தும் கொள்கையாகவும் (positive discrimination) தோன்றலாம். ஆனால் இணையத்தின் இடையீடு இல்லாவிட்டால் இன்று கால் பந்தாட்டம் ஒரு பல்லின, பல்நாட்டு விளையாட்டாக மாறியிருக்காது.

அமெரிக்காவின் பிரபலமான baseball போல் ஒரு பிராந்திய ஆட்டமாக, ஒரு சில வலிமைவாய்ந்த நாடுகளின் முற்றுரிமை விளையாட்டாகவே கால்பந்து விளையாட்டும் இருந்திருக்கும். தென்னாப்பிரிக்காவில் போட்டியிடும் ஆப்பிரிக்க நாடுகளான கானா, ஜவரி கோஸ்ட், நைஜீரியா, காமரூன் போன்ற நாடுகளுக்கு உலகின் பணக்கார நாடுகளின் G8 சங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமலிருக்கலாம். இந்த நாடுகளின் தெருக்கள் பள்ளங்கள் நிறைந்தவையாக இருக்கலாம். இவற்றின் தொழில்கூடங்கள் பாழ் நிலையில் இருக்கலாம். ஆனால் இந்த நாடுகளின் வீரர்கள் அவர்களுடைய கூர்மையான இயற்கைத் திறனாலும் தம் மனோதிடத்தாலும் விரைந்து செயல்படும் லாவகமான விளையாட்டு முறைகளாலும் உலக அரங்கில் பணக்கார நாடுகளோடு போட்டியிடத் தமக்குத் தகுதி உண்டு என அறிவித்திருக்கிறார்கள்; நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள். இதற்குச் சிறப்புமிக்க உதாரணம்: கானா அணி அமெரிக்காவைத் தோற்கடித்தது. ஆப்பிரிக்க வீரர்களின் துள்ளலான, துடுக்கான விளையாட்டுக்காகவே இந்த நாடுகளை ஆதரியுங்கள், இவர்களின் அருஞ்செயல்களைக் கொண்டாடுங்கள் என்று நைஜீரிய நாவல் ஆசிரியர் சின்மண்டா ஆடிச்சி ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

ஐரோப்பிய அணிகளின் புறத் தோற்றங்களும் வடிவங்களுங்கூட மாறிவருகின்றன. முன்பெல்லாம் மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த கால்பந்தாட்டக் குழுக்களின் வீரர்கள் வெள்ளையர்களாகவே இருப்பார்கள். இப்போது மேற்கத்தைய சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அணிகளின் சார்பாகப் பல்லின, பல்சமய வீரர்கள் அங்கம் வகிப்பதைக் காணலாம். 1936இல் ஒலிம்பிக் விளையாட்டுகளை வெள்ளைத் தேசியத்தையும் ஆரிய இனவாதத்தையும் கிறிஸ்துவத்தையும் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்திக்கொண்ட ஜெர்மன் நாடுகூட இப்போது பல்லின, பல்சமய அடையாளங்களைக் கொண்டுள்ளது. ஜெர்மன் அணியின் பாதி வீரர்கள் அந்த நாட்டுக்கு வெளியே பிறந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோரில் ஒருவர் ஜெர்மனியர் அல்லாதவர். இன்று ஜெர்மனியின் முக்கிய ஆட்டக்காரர்களான Sami Khedira, Mesut Ozil நாட்டுரிமைபெற்ற துருக்கிய, தூனிஷ்ய, குடிவரவாளர்கள். இவர்களில் ஒருவருக்கு அடுத்த Zinedine Zidane ஆக வாய்ப்பு உண்டு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். Zidane கால்பந்தாட்டதின் சச்சின் தெண்டுல்கர் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களில் Ozil இஸ்லாமிய வழிபாட்டாளர். ஆட்டம் ஆரம்பிக்கும்முன் ஜெர்மன் தேசியகீதத்தை உரக்க உற்சாகமாகப் பாடும் இவர் ஆட்டக்காரர்களின் உடுக்கைக் கூடத்தில் (dressing room) குரான் வசனங்களை ஒப்புவிக்கிறார். இவரைப் பற்றி விளையாட்டு சம்பந்த மற்ற இன்னுமொரு தகவலையும் தருகிறேன். இவருக்கு Anna Maria Lagerblom என்ற காதலி இருக்கிறார். காதலுக்காக மதம் மாறவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். சில வருடங்களுக்குமுன் இந்த மதமாற்றம் ஜெர்மனிய இன மரபுவாதிகளின் புருவங்களைச் சற்று உயரச்செய்திருக்கும். மாறுபட்ட ஜெர்மனியில் இந்த அறிவிப்புப் பழைமைவாதிகளின் கண் இமைகளுக்கு அதிக வேலை கொடுத்ததாகத் தெரியவில்லை.

பல்லின, பல்சமய விளையாட்டுக் குழுக்கள் அந்த நாட்டின் இன உறவுகள் கருணை மிகுந்தவை என்பதற்கு அடையாளமில்லை. 1998இல் உலகக் கால்பந்தாட்டக் கோப்பையை வென்ற பிரான்சு அணிகூட ஒரு பல்லின, பல்சமய வீரர்களைக் கொண்டிருந்தது. இந்த அணி நம் நாட்டின் ஒற்றுமைக்கும் பல்வகைத்தன்மைக்கும் ஒரு மகத்தான எடுத்துக்காட்டு என அப்போதைய பிரான்சின் சோசலிசப் பிரதமர் லையனல் ஜொஸ்பின் கூறியிருந்தார். அடுத்த உலகக் கோப்பைக்கான விசில் ஊதுமுன் நாடே மாறிப்போயிற்று. ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரிகளால் ஜொஸ்பின் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். பாரிசில் நடைபெற்ற இனக் கலவரங்களால் குடியேற்றவாசிகள் மையநீரோட்ட அரசியல் அமைப்புகளின் கொள்கைத் திட்டத்தால் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது வெளி உலகுக்குத் தெரியவந்தது. இனவாதமும் இஸ்லாமிய எதிர்ப்பும் இன்னமும் தொடர்கின்றன என்பதை நிரூபிக்கப் பொதுவெளிகளில் இஸ்லாமியப் பெண்கள் முழுத்திரைச்சீலையுடன் நடமாடத் தடைசெய்யச் சட்டம் உருவாகிவருகிறது. எந்த அணி பல்சமய, பல்லினச் சமூகத்திற்கு முன் உதாரணமாக இருந்ததோ அதே அணி இன்று உட்பூசல்களாலும் ஆட்டக்காரர்களின் தகராறுகளாலும் பிளவுபட்டு 2010 போட்டியில் இரண்டாம் கட்டத்துக்கு வர முடியாத நிலையில் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று.

கால்பந்தாட்டம் இன்று வியாபாரப் பண்டமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆட்டம் ஒரு நற்செய்திப் பணியாக, வறியவர்களை உய்விக்கும் கருவியாகத்தான் ஆரம்பமானது. இன்றைய முன்னணி ஆங்கில விளையாட்டுக் கழகங்களின் தொடக்கம் ஆன்மிகத்துடன் தொடர்புடையது. தற்போது பிரபலமாக இருக்கும் தொழில்முறை விளையாட்டுக் கழகங்கள்(professional clubs) முதலில் கிறிஸ்தவ ஓய்வுநாள் பாடசாலைகளின் விளையாட்டுக் குழுக்களாகத்தான் தம் வாழ்வைத் தொடங்கின. விக்டோரியன் மறை குருக்கள் அன்று தொழில் புரட்சியால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆன்மிகத்தை மட்டுமல்ல ஆண்மையையும் போதிக்க முற்பட்டார்கள். ஆன்மிகச் சங்கதிகளான விசுவாசம், பக்தி, பாவம், மன்னிப்பு, இரட்சிப்பு இவற்றுக்குக் கிறிஸ்தவம். ஆண்மை சமாச்சாரங்களான தைரியம், மனோதிடம், சுயநலமற்றதன்மை, நெறிமுறையான பார்வைக்கு விளையாட்டு. இந்தச் சிறப்பியல்புகளைத் தொழிலாளர் மத்தியில் பரப்பும் வாகனங்களாகக் கிரிக்கெட், ரக்பீ, கால்பந்தாட்டம் ஆகியன பயன்பட்டன. இன்றைய புகழ்பெற்ற 39 ஆங்கில விளையாட்டுக் குழுக்களில் 12க்குத் திருச்சபைத் தொடர்புண்டு. அவற்றில் கீர்த்தியான சில குழுக்களின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே அதிகமாகப் பரிச்சயமானதால் அவற்றை அந்த மொழியிலேயே தருகிறேன்: Aston Villa, Manchester City, Tottenham Hotspur, Birmingham City, Fulham, Everton. தொடக்க நாட்களில் இந்த அணிகளின் பெயருடன் இவற்றின் திருச்சபை சார்ந்த பெயர்களும் ஒட்டிக்கொண்டிருந்தன. ஒரு உதாரணம்: Aston Villa Wesleyan Football Club. இந்த விளையாட்டுக் கழகங்களின் இன்றைய பண பலம், வர்த்தக வியூகங்கள், ஆட்டக்காரர்களின் ஆளுமைத் திமிர் ஆகியவை பற்றிக் கேள்விப்பட்டால் அந்த விக்டோரியன் குருமார்களின் தேகம் அவர்களுடைய கல்லறையில் உருண்டு புரளும் என நினைக்கிறேன்.

விளையாட்டும் இலக்கியமும்

ஒரு விளையாட்டின் மதிப்பும் தரமும் விளையாட்டு வீரர்களின் சாமர்த்தியம், ஆட்டங்களில் அவர்கள் வெளிப்படுத்தும் நுட்பங்களில் மட்டுமல்ல, அதன் தாக்கங்களிலிருந்து உருவாகும் இலக்கியப் பதிவுகள் சார்ந்தும் மதிப்பிடப்பட வேண்டியது. கால்பந்தாட்டம் சார்ந்து இலக்கிய அந்தஸ்துடைய புத்தகங்கள் இன்னும் உருவாகவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கிரிக்கெட் பற்றி C.L.R.James இன் Beyond the Boundary போன்று இலக்கியமும் மார்க்சியக் கருத்தியலும் இணைந்த கலவை நூல்கள் கால்பந்தாட்டம் சார்ந்து தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் தேசிய விளையாட்டான baseball நிறைய இலக்கியங்களைத் தந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானவை Philip Rothஇன் The Great American Novel, மற்றும் Don DeLilloஇன் Underworld. அமெரிக்கர்களுக்கு அவர்களின் சரித்திரம் பற்றி உக்கிரமான நினைப்பு எப்போதும் உண்டு. இந்த baseball விளையாட்டு அமெரிக்கர்களுக்குத் தம் வரலாறு பற்றிய பேரார்வத்தை முழுமைப்படுத்துவதாக இருப்பதே இந்த நூல்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம். ஆங்கில இலக்கியம் அடுக்கதிகாரமானது (hierarchical). ஆகையால் சில எழுத்துகள் அதிகம் கவனம் பெறுவதில்லை. ஓரங்கட்டப்பட்ட நூல்களில் முக்கியமானது கொலை-இலக்கியம் (crime literature). இதில் விளையாட்டு பற்றிய ஆங்கில நாவல்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் குறுகலான பார்வையையும் மீறிக் கால்பந்தாட்டம் பற்றி மக்கள் விரும்பக்கூடியதான நூல் Nick Hornby Þ¡ Fever Pitch. இது ஒரு கால்பந்தாட்ட ரசிகனின் கதை. இந்த நாவல் அமெரிக்கர்களாலும் ஆங்கிலேயர்களாலும் இரு வெவ்வேறு வடிவங்களில் திரைப்படமாக்கப்பட்டது. நான் நாவலை வாசிக்கவில்லை. திரைப்படங்களையும் பார்க்கவில்லை.

தமிழில் எனக்குத் தெரிந்து கால்பந்தாட்டம் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ஒரே ஒரு நூல் சுந்தர ராமசாமியின் ஜே. ஜே: சில குறிப்புகள். ஜோசப் ஜேம்ஸ் என்ற அந்நாவலின் மையப் பாத்திரம் இலக்கிய ஆர்வமுள்ள ஒரு கால் பந்தாட்டக்காரன். தனி ஆட்டக்காரர்களின் மகாத்மியங்களைப் பெரிதுபடுத்தும் இந்நாட்களில், ஜே.ஜே. இந்த விளையாட்டை அணி சார்ந்ததாகத்தான் பார்க்கிறான். இதை உறுதிப்படுத்த அவனது குறிப்பிலிருந்து சில வசனங்கள்: ‘காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல என் குழுவினுடையது என எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச்செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக்கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே’.

இலக்கிய அந்தஸ்துள்ள புத்தகங்களைக் கால்பந்தாட்டம் உருவாக்கவில்லை என்று சொல்லியிருந்தேன். அதில் ஒரு சிறு திருத்தம். இலக்கியத் தரம் இல்லாவிட்டாலும் உலகத்தை மாற்றிய நூல்களில் ஒன்று இந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது. ஆங்கிலேயக் கலாச்சார விமர்சகர் மெல்வின் பிராக் உலகை மாற்றிய பன்னிரெண்டு புத்தகங்கள் என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டிருந்தார். அவர் பட்டியலிட்ட நூல்களில் ஒன்று இந்த விளையாட்டின் விதிமுறைகளை ஒழுங்கு முறைக்குக் கொண்டுவந்த சிறு கையேடு. அதன் பெயர் The Rules of Association Football. இது 1863இல் பிரசுரிக்கப்பட்டது. ஒன்றுக்கொன்று மாறான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்த விளையாட்டை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரக் காரணமாயிருந்தவர்கள் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலைப் பட்டதாரிகள்.

அதற்குமுன் யாழ்ப்பாணக் கிராமங்களில் பிரபலமான கிட்டுப் புளி ஆட்டம்போல் ஒவ்வொரு குழுவும் தனக்கென ஆடுமுறைகளை வைத்திருந்தன. விளையாடும் ஆடுதளம்கூட ஒரே அளவில் இருக்கவில்லை. சில கழகங்களின் விளையாட்டுத் திடல் பழைய இம்பீரியல் அளவையில் 150 அல்லது 200 அடிகள் இருந்தன. ஆட்டம் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்தால் இன்று போல் penalty shoot out மூலம் ஆட்டத்தின் முடிவு தீர்க்கப்படவில்லை. ஆடுதளத்தை இருமடங் காக்கி ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். கால்பந்தாட்டத்திற்கு அந்த நாட்களில் கிரிக்கெட் விளையாட்டைப் போல் இரண்டு அம்பயர்கள் இருந்தார்கள். கிரிக்கெட் போட்டியில் நடப்பது மாதிரி வீரர்கள் முறையீடு செய்ய வேண்டும். ஆடுதளத்திற்கு வெளியே நின்றுதான் அம்பயர்கள் தீர்ப்பளித்தார்கள். நடுவர் ஆடுதளத்துக்குள் விளையாட்டு வீரர்களோடு ஒருவராகப் பணிபுரிவது பிறகுதான் அறிமுகமாயிற்று. இப்படிக் கன்னாபின்னாவென இருந்த சட்டங்களைச் சீரமைத்த பெருமை இந்தச் சிறிய நூலுக்கு உண்டு. இந்த ஒழுங்கு விதிகளைத் தொகுத்த பட்டதாரிகள் கோல்காப்பாளரைத் தவிர மற்றவர்கள் முழுக்க முழுக்கக் காலை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என ஒரு விதியை உருவாக்கினார்கள். இதற்கு முன் ரக்பிபோல் கையில் பந்தை எடுத்துக்கொண்டு ஓடலாம். இவர்கள் இயற்றிய 13 விதிகளில் பெரும்பாலானவை ஆட்டக்காரர்களின் கை எப்படிப் பந்தைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியவை. காலனியக் காலத்தில் இந்த ஆட்டம் பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த விதிமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

ஒரு கட்டுரை நிறைவுபெற வாசகர்களுக்கு ஆன்மிக எழுச்சி உண்டாக்கக்கூடிய அல்லது அவர்களுக்குக் குஷி தரக்கூடிய செய்தியுடன் முடிக்க வேண்டும் என்று இதழியல் கையேடுகள் போதிப்பது உண்டு. ஆனால் இந்த அறிவுறுத்தலுக்கு மாறாக உங்களைச் சோர்வடையச் செய்யும் செய்தியுடன் முடிக்கிறேன். சர்வதேசக் கால் பந்தாட்ட இணையம் அதன் 204 உறுப்பு நாடுகளின் விளையாட்டுத் திறனை வரிசைப்படுத்தி ஒரு பட்டியல் வைத்திருக்கிறது. நான் எழுதிக்கொண்டிருந்தபோது 2010 போட்டிக்குப் பின் திருத்தியமைக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவின் இடம் 132. வெந்த புண், வேல் சங்கதிகளை நினைவூட்ட இன்னுமொரு தகவலையும் தருகிறேன். குட்டி நாடான சிங்கப்பூர் வகிக்கும் இடம் 121.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>